சனி, 24 மே, 2014

செவ்வாய், 13 நவம்பர், 2012

<> கொள்ளு சூப் <>



கொள்ளு சூப்


                          
தேவையான பொருள்கள்:-
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு - 5 பல்
தக்காளி - 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்க
நல்லெண்ணெய் - சிறிது
கடுகு - சிறிது
வரமிளகாய் - 2

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும். மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

மருத்துவ குணம்: -
தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு.


கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர்.குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள்.கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள்.மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள்.இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள்.
சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொள்ளு ரச‌ம்,கொள்ளு துவைய‌ல்,கொள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.



இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு - களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.


சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தும் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.
வற்றிய உடம்பு தூணாம் வாதமும் பித்துங் குக்கி

சுற்றிய கிராணி குன்மஞ் சுரம்பல சுவாச காசம்

உற்றடர் கண்ணன் புண்ணோ டுறுபிணி யொழியும் வெப்பைப்

பெற்றிடுங் காணச் சாற்றாற் பெருஞ்சல தோடம் போம்

கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.

உடல் பருத்து (தொளதொளவென்று) தசை இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் தசைகள் இறுகி வலுப்பெறும். தேவையற்ற நீர் வெளியேறும். 



<>முடக்கத்தான் கீரை சூப் <>



முடக்கத்தான் கீரை சூப்

தேவையானவை
முடக்கத்தான் கீரை 
தேவையான உப்பு
தேவையான மிளகுத்தூள்
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து காபி,டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.



குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். 

இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்

தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

<>முள்முருங்கை தோசை / முள்முருங்கை அடை<>


முள்முருங்கை தோசை

முள் முருங்கை கீரை-சிறிதளவு
பச்சரிசி மாவு-1 கப் அல்லது ஒரு உழக்கு அளவு
உளுந்து மாவு- கால் கப் கால் உழக்கு அளவு
உப்பு-தேவயான அளவு
மிளகுத்தூள்-1 டீஸ்பூன்

செய்முறை:

முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கொள்ளவேண்டும். சிறுகச் சிறுக தண்ணீர் விட்டு தோசைப் பதத்திற்கு கரைத்துகொண்டு ஒரு அளவு கரண்டி மாவு எடுத்துத்
தோசையை வார்க்க வேண்டும்.  இதை ஆலிவ் எண்ணெய் விட்டு புரட்டிப் போட்டு முறுகலாகச் சுட்டுப் போட்டால் இன்னும் ரெண்டு குடுங்க‌
என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.

முள் முருங்கை


இதையே அடையாகச் சுடலாம்.
முள் முருங்கை இலை ஏழெட்டு எடுத்துக்குங்க. அதை சுத்தமா கழுவிட்டு, நைஸா அரைச்சு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதோட ஒரு கப் பச்சரிசி மாவு, வறுத்து அரைச்ச உளுந்து மாவு கால் கப், தேவையான உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள்,
ஒரு சிறு துண்டு இஞ்சியை மிகவும் சன்னம்சன்னமாக வெட்டி அதையும் சேர்த்து பிசைஞ்சு சின்னச் சின்ன உருண்டைகளாக 
எடுத்து, உள்ளங்கையில் வைத்து வடையைவிட கொஞ்சம் பெரிய சைசுக்குத் தட்டி,  தோசைக் கல்லுலப் போட்டு 
மொறுமொறுப்பா சுட்டெடுக்கலாம். இப்பொழுது முள் முருங்கை அடை ரெடி.

இந்த அடை சூடா இருக்கறப்பவே மேலே இட்லிப்பொடி தூவி பரிமாறுங்க. ருசி ரொம்ப ஜோரா இருக்கும்.
இதைச் சின்னச் சின்ன பூரியா சுட்டுக் கொடுத்தா குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.

முள்முருங்கையின் மருத்துவக் குணங்கள்:

முள்முருங்கை இலை-தளிர் அரைத்து தேனுடன் கலந்து பூசினால் அரிப்பு குணமாகும்.

கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.







<>தானிய அடை<>


தானி அடை

தேவையான பொருட்கள்
கோதுமை - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
கம்பு - 1 கப்
சோளம் - 1 கப்
மிளகாய் வற்றல் - 4
பூண்டு - 4 பல்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கேரட் - 1
வெங்காயம் - 2
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம் முதலியவற்றை 4 மணி நேரம் ஊற வைத்து, மிளகாய், பூண்டு, சீரகம், சோம்பு, உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். கேரட், வெங்காயம் முதலியவற்றின் தோலை எடுத்து விட்டு பொடிப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள மாவுடன் கேரட், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்.

<>சோள தோசை<>


சோள தோசை
தேவையான பொருட்கள்
வெள்ளை சோளம் - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
தனியா (மல்லி விதை) - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
சிவப்புத் தக்காளி 4
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை

சோளம், உளுந்தம் பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸியில் சோளம், உளுந்தம் பருப்பு, தனியா, சீரகம் போட்டு அரைக்கவும். சிறிது அரைபட்டவுடன் வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அரைத்து தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி தோசைகளாக சுட்டு எடுக்கவும். தக்காளி சட்னியுடன் பரிமாறவும். 

கொஞ்சம் ருசி,புளிப்பு தேவை என்று கருதினால் பழுத்த சிவப்புத் தக்காளி 4 சேர்த்து கடைசியாக அரைத்துக்
கொண்டால் சூப்பர் தோசை. கலர்ஃபுல் தோசையாகவும் ருசியாகவும் இருக்கும்.

திங்கள், 12 நவம்பர், 2012

<>ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை...<>


ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. 

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. 

புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது. 

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது. 

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி.
ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. 

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. 

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள். 

மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.